ஊருக்கு ஆறழகு, ஊர்வலத்தில் தேரழகு! கண்ணுக்கு மை அழகு பாடலில் வைரமுத்துவின் வரிகள். மாலை மயங்கும் நேரத்தில் ஆற்றுப் பாலத்தில் நின்று வெட்டிக் கதை பேசுவது மிகவும் இனிமையான அனுபவம். மாலைச் சூரியனின் கதிர்கள் ஆற்று நீரில் மஞ்சளில் ஆரம்பித்து ஊதா வரை வித விதமான வண்ணங்களை தீட்டி மெதுவாக அன்றைய இரவுக்குத் தயாராகும். அந்த அந்தி சாயும் வேளயில் வைக்கோலோ சோளமோ ஏற்றிக்கொண்டு வீடு திரும்பும் மாட்டுவண்டிகள் பாலத்தைக் கடக்கையில் விட்டுச் செல்லும் அந்தப் பச்சை வாசனையை நுகர்ந்து கொண்டு இருக்கும் நேரத்திலயே தூரத்து வால்பாறை மலைகளில் இருள் போர்வை போர்த்தி மலைப் பாதையில் வண்டிகள் சிறு தீப்பெட்டிகளாக இரு வெளிச்சப் புள்ளிகளுடன் செல்லும் காட்சி நம்மைக் கட்டிப் போட்டு விடும். மெதுவாக எப்பொழுது ஆரம்பதிதது என்றே தெரியாமல் கேட்கும் விட்டில் பூச்சிகளின் ரீங்காரமும், ஆற்றங்கரையில் இருக்கும் ஓங்கி உயர்ந்த மரங்களில் கூடு கட்டி இருக்கும் பறவைகளின் வீடு திரும்பிய மகிழ்ச்சிக் கூக்குரல்களும், துணிகளைத் துவைத்து முடித்து வீடு திரும்பும் பெண்களின் பேச்சு சத்தமும் நம்மைத் தட்டி எழுப்பும். பாலத்தின் மெல்லிய தென்றல் வருட மறுகரையை அடையும் பொழுது நம்மை வரவேற்பது கப்பக்கிழங்கு, வேர்க்கடலை முதல் கருவாடு வரை விற்கும் தள்ளுவண்டிகளின் அணிவகுப்பு. அன்றைய தேர்வினை ஒரு கை பார்த்து விட்டு வயிறும் மனமும் நிறைந்த திருப்த்தியில் வீடு நோக்கி மெதுவாக நடையைக் கட்டலாம். சொல்ல வந்த விஷயத்தையே மறந்துவிட்டேன். ஆற்றங்கரையை மையமாக வைத்து நம்ம ராஜா பல பாடல்களைத் தந்து இருக்கிறார். அதில் ஒரு முத்து இதோ. எந்தப் பாடல் என்று கண்டுபிடியுங்கள். சிறு சிறு இடைவெளி விட்டு பாடலின் மூன்று பின்னணி இசைத்துளிகள் ஒரே கோப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
பதிவில் காணும் இடம்: ஆனைமலை ஆற்றுப்பாலம், பொள்ளாச்சி
| Interludes.mp3 |
